ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மகா வைபவம் ரத்தின அங்கியுடன் பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் எழுந்தருளல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், 108 வைணவ திவ்ய தேசங்களின் முதன்மைத் தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று பக்திப் பெருக்கோடு நடைபெற்றது. கடந்த 19-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, 20-ஆம் தேதி முதல் ‘பகல் பத்து’ உற்சவம் விமரிசையாக நடைபெற்று வந்தது. இதன் 10-ஆம் திருநாளான நேற்று, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் ‘மோகினி அலங்காரத்தில்’ எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமுதத்தை தேவர்களுக்குப் பகிர்ந்து அளிக்க மகாவிஷ்ணு எடுத்த மோகினி அவதாரத்தை நினைவூட்டும் விதமாக அமைந்த இந்த அலங்காரத்தில், வைரம் பாய்ந்த மூக்குத்தி, ஜடை பின்னல் மற்றும் திருவாபரணங்களுடன் நம்பெருமாள் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘ராப்பத்து’ உற்சவத்தின் முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை, அதிகாலை 4.30 மணி அளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டார். ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை மற்றும் கிளிமாலை சூடி கம்பீரமாகக் காட்சியளித்த அவர், இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்தைச் சென்றடைந்தார். பின்னர், துரைப்பிரதட்சணம் வழியாகப் பரமபத வாசல் பகுதிக்கு வந்தடைந்தார். சரியாக அதிகாலை 5.45 மணி அளவில், வேத மந்திரங்கள் முழங்கச் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அப்போது, ரத்தின அங்கியுடன் நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே எழுந்தருளியபோது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…”, “ரங்கா… ரங்கா…” என விண்ணதிரப் பக்தி முழக்கங்களை எழுப்பி மெய்மறந்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மணல்வெளி மற்றும் நடைப்பந்தல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு நம்பெருமாள் வந்தடைந்தார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் பக்தர்களுக்குச் சேவை சாதித்த பின், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை காட்சியளிக்கிறார். இரவு 12 மணிக்குப் புறப்படும் அவர், வீணை வாத்தியங்கள் முழங்க அதிகாலை 1.15 மணிக்கு மீண்டும் மூலஸ்தானத்தைச் சென்றடைவார். இந்த ஆன்மீகப் பெருவிழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுத் தரிசனம் செய்தனர்.

இவ்விழாவிற்காகத் திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகத் திருச்சி மாநகராட்சி சார்பில் விரிவான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் மாநகரக் காவல் ஆணையர் காமினி தலைமையில் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மதியம் முதலே ஸ்ரீரங்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, வாகன நெரிசலின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயில் இணை ஆணையர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கினைந்து செய்திருந்த இந்தச் சிறப்பான ஏற்பாடுகள், லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தைப் பயனுள்ளதாக மாற்றின.

Exit mobile version