திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த குண்டலபட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில், மூன்றாவது புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழாவும், 21-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவும் பக்திப் பெருக்குடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆன்மீக மணம் கமழ நடைபெற்ற இந்த விழாவானது, சித்தையன் கோட்டை ஸ்ரீ நாகரத்தின சுவாமிகள், ஸ்ரீ கல்யாணி அம்மையார் மற்றும் சாந்தி பிரியா ஆனந்தபுரி அம்மையார் ஆகியோரின் நல்லாசியோடும், ஸ்ரீதேவி ஆசிரம நிறுவனர் ஸ்ரீ செந்தில் சுவாமிகள் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பெங்களூர் செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்தார். விழாவின் தொடக்கமாக மங்கல இசை முழங்க, முதற்கால யாக பூஜை, குரு பிரார்த்தனை, தேவதா அணுகஞ்சை மற்றும் மகா சங்கல்பம் ஆகிய வழிபாடுகள் முறையாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டன.
யாகசாலை பூஜைகளின் நிறைவாக, வேத விற்பன்னர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களைச் சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர், சர்வ சாதகம் சோழவந்தான் கும்பாபிஷேக சிரோன்மணி பிரம்மஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் தலைமையில், ஜோதிட ரத்னா ரிஷிகேசன் சிவம் உள்ளிட்ட வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ பாலமுருகன் சுவாமி விமான கோபுரத்திற்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற அந்தப் புனிதமான நேரத்தில் வானத்தில் கருடாழ்வார் வட்டமிட்டு தரிசனம் தந்த நிகழ்வு, அங்கிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.
இந்த ஆன்மீக சங்கமத்தில் குண்டலபட்டி, சிறு நாயக்கன்பட்டி, நிலக்கோட்டை, அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு “அரோகரா” முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் மூலவர் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் விழா குழு உறுப்பினர்கள் குண்டலப்பட்டியை சேர்ந்த வீரமணி, சிவா, முருகன், சந்திரசேகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்களும் தன்னார்வலர்களும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

















