ராஜன்செல்லப்பா வழங்கிய வாசனை மிகுந்த ஏலக்காய் மாலை தேசிய ஜனநாயக கூட்டணி விழாவில் உற்சாக வரவேற்பு!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நேற்று மதுரைக்கு வருகை தந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மதுரை மண்ணில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற இந்த மெகா கூட்டணியின் பொதுக்கூட்டம், வரவிருக்கும் தேர்தல் களத்திற்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்ள வந்த எடப்பாடியாருக்கு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மிகப்பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கழகத்தின் அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாசனை மிகுந்த ‘ஏலக்காய் மாலை’ அணிவித்து, சால்வை போர்த்தி மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். மதுரை மண்ணின் பாரம்பரியத்தையும், கழகத்தின் மதிப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த வரவேற்பு நிகழ்வின் போது, மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

விமான நிலையம் தொடங்கி பொதுக்கூட்ட மேடை வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தங்கள் தலைவருக்கு மலர் தூவியும், முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்தனர். வி.வி. ராஜன் செல்லப்பா தலைமையிலான இந்த வரவேற்பு நிகழ்வு, மதுரையில் அதிமுகவின் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களுடன் எடப்பாடியார் கைகோர்த்து நின்றது, தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version