படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, படத்தை பற்றி விஜய் கவலைப்படவில்லை இயக்குனர் S.A.சந்திரசேகரன் பேட்டி

படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, படத்தை பற்றி விஜய் கவலைப்படவில்லை. படத்தை வைத்து பிளாக் மெயில் பண்ணுவது நடக்காது என திருவாரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் பேட்டி…

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது….

60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன. புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது இப்படிப்பட்ட இடர்கள் ஏற்படுவது வழக்கம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மாற்றத்தை உருவாக்க வருபவர்கள் இப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஜனநாயகம் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று சாலையில் செல்லும் பெண்மணிக்கு கூட தெளிவாக தெரியும். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள் எல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். 50, 60 வயதான பெண்மணிகள் கூட அரசியல் பேசுகின்றனர். 3000, 5000 எது கொடுத்தாலும் வாங்கி கொள்வோம். ஆனால் ஓட்டு அவருக்குத்தான் என்று கூறுகின்றனர். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் செய்தியாளர்கள் நினைத்ததை சொல்வதற்கு சுதந்திரம் இருக்கிறதா..? என்ற செய்தியாளர்களை பார்த்து திரும்ப கேட்டார். விஜய்க்கு பயமில்லை. விஜய்க்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. “யாருடனும் சேர்ந்து கொள்ளாதே தம்பி, உன்னுடைய சுயம் போய்விடும், நீ தனியா நில்லு ஜெயிக்க வைக்கிறோம்” என்று மக்கள் கூறுகிறார்கள். சுதந்திரத்துக்காக போராடிய வரலாறு இருக்கிற கட்சி, தற்போது தேய்ந்து போயிருப்பதற்கு காரணம் என்ன..? ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஆதரவு கொடுத்து தேய்ந்து போய் கொண்டே இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் கொடுப்பதாக கூறுகிறார். அவ்வாறு செய்தால் மீண்டும் அந்த வரலாறை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பை காங்கிரஸ் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு என்னை விட அதிகமாக தெரிகிறது. 3000 ரூபாய் இப்போது தருகிறீர்கள். நான்கு வருடமாக என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ?இப்போதுதான் தெரிகிறதா நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று வயதான பெண்மணி ஒருவர் கேள்வி கேட்கிறார். ஒரு நாளைக்கு ஒரு திட்டம் அறிவிக்கிறீர்கள். இது எதற்கு என்று எங்களுக்கு தெரியும் என்று நான் கூறவில்லை, வயதான தாய் தந்தை கூறுகிறார்கள். படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, சம்பந்தப்படுத்தாதீர்கள். விஜய் இப்போது நடிகர் இல்லை அரசியலுக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது. படத்தை பற்றி அவர் கவலைப்படவில்லை. படத்தை வைத்து பிளாக் மெயில் பண்ணுவது நடக்காது என்று கூறினார்.

Exit mobile version