மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வரும் ஒரு நபர், தனது சட்டபூர்வமான வருமானத்தைவிட ரூ. 67.25 கோடிக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவில் சொத்து சேர்க்கப்பட்டதற்குப் பின்னணியில் உள்ள குடும்ப விவகாரங்களும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மதுரை மாவட்டம், செக்கானூரணியைச் சேர்ந்த பாண்டி (58) என்பவர், திருமங்கலம் தாலுகா, கே.புளியங்குளம் கிராம உதவியாளராகப் (தலையாரி) பணியாற்றி வருகிறார். இவர், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை திருமங்கலம் தாலுகா, ஏ.கொக்குளத்தில் கிராம உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.
தனது வருமானத்திற்கு மீறி பாண்டி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்குப் (DVAC) புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் பாண்டி தனது அரசு மாதச் சம்பளத்தைத் தாண்டி அசாதாரணமான அளவில் சொத்துகளைக் குவித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், பாண்டி வருமானத்திற்கு மீறி மொத்தமாக ரூ. 67 கோடியே 25 லட்சத்து 634 மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சொத்துக்கள் பாண்டியின் பெயரிலும், அவரது மனைவி ராணி பெயரிலும், இரண்டு மகன்களின் பெயரிலும் வாங்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பாண்டியின் குடும்பப் பின்னணியும் சொத்து குவிப்பு விவகாரமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
பாண்டியின் மூத்த மகன் பிரபாகர் ஒரு தனியார் வங்கி ஊழியர். இவர் உடல்நலக்குறைவால் காலமானார். பிரபாகரின் மனைவி மாளவிகா. மூத்த மகன் இறந்த பிறகு, குடும்பச் சொத்துக்கள் கைமாறிப் போவதைத் தடுக்கும் நோக்கத்தில், பாண்டி இரண்டாவது மகன் பிரகாஷூக்கு மாளவிகாவைத் திருமணம் செய்து வைத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மாளவிகா குடும்பப் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு, இரண்டாவது மகன் பிரகாஷூம் கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி உயிரிழந்தார். தற்போது, இந்த இரண்டு மகன்களின் பெயரிலும் சொத்துக்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்துக் கூறுகையில், “கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் பெரும்பாலானவை தனது மனைவி தரப்பில் (மாமனார் வீடு) இருந்து தரப்பட்டதாக பாண்டி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குடும்பச் சொத்துக்கள் வேறு யாருக்கும் கைமாறிச் சென்றுவிடாமல் இருப்பதற்காகவே, மூத்த மருமகள் மாளவிகாவை இளைய மகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும் தெரிகிறது. இந்தச் சொத்துக்கள் பாண்டியின் சட்டபூர்வமான வருமானத்திற்கு மீறியவை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தச் சொத்துக்களின் உண்மையான ஆதாரம் மற்றும் சட்டப்பூர்வத்தன்மை குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர். ஒரு கிராம உதவியாளர் சுமார் 67 கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்துள்ள சம்பவம், அரசுத் துறையில் உள்ள மிகச்சிறிய மட்டத்தில் கூட ஊழல் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
















