கோவை விமான நிலையத்தில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழக பாஜகவின் இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
தமிழகத்தில் கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துவது எங்களது முதன்மை நோக்கமாகும்.
மேலும், தமிழகத்தில் உள்ள மற்ற பிரச்சனைகளை மறைத்து மாநிலம் கல்வியில் சிறந்த விளங்குவதாக திமுக அரசு நிகழ்ச்சி நடத்தியது. உண்மை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள 90 சதவீத அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. மாநிலத்தில் உள்ள 35 ஆயிரம் அரசு பள்ளிகளில் நான்காயிரத்து ஐநூறு பள்ளிகளில் முதல்வர்கள் இல்லை. இவ்வாறு கல்லூரியிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இவற்றை நிரப்புவதாக தேர்தல் வாக்குறுதிகள் கூறிய திமுக இன்னும் அதை செய்யவில்லை. இப்படி இருந்தால் தமிழகத்தின் கல்வி தரம் எப்படி இருக்கும்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எட்டாவது பயிலும் மாணவர்கள் 75 சதவீதத்தினருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை கூட படிக்க தெரியவில்லை. இதைச் சொன்னால் உத்தரபிரதேசத்தோடு பீகாரோடு ஒப்பிடுங்கள் என கூறுகின்றனர். தமிழகத்தின் பின் தங்கிய கல்வித்தரத்தை சுட்டிக்காட்டினால் கொச்சைப்படுத்துவதாக விமர்சிக்கின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பள்ளிக்கல்வித்துறையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில் கணிப்பொறி பாடம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆசிரியர் காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு, அறிவியல் என பல துறைகளிலும் சர்வதேச போட்டி உருவாகி வரும் சூழலில் நமது மாணவர்களால் எப்படி போட்டியிட முடியும்.
மேலும், தமிழகம் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம், அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கூறியது போல திமுக அரசு டாஸ்மாக்கிலும் பத்திர பதிவுகளும் சட்ட விரோதமாக நிதியை பெறுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உருவாகி வருகிறது. ncrp தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக அளவில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரம் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தகுதி இல்லாத மாநகரமாக உள்ளது’ என தெரிவித்தார்.
‘தவெக தலைவர் விஜய், அரசின் நீட் தேர்வு பரந்தூர் விமான நிலையம் என பல்வேறு திட்டங்களை விமர்சிக்கிறாரே தவிர அதற்கு மாற்றான விஷயங்களை முன் வைப்பதில்லை. முதலில் அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அவரது அரசியல் வெற்றி தீர்மானிக்கப்படும் என்றார்.
பாஜகவின் இளைஞர் அணியினர் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு நல திட்டங்களை மக்களிடம் முன்னெடுத்துச் சென்று வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை வெற்றி பெற பணியாற்றுவார்கள்’ என தெரிவித்தார்.