திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அமைந்துள்ள சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நுண்கலை மன்றத்தின் (Fine Arts Club) சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்குச் சக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வேம்பணன் தலைமை தாங்கி, விழாவைத் தொடங்கி வைத்ததுடன் மாணவிகளுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, கல்லூரி முதல்வர் தேன்மொழி வரவேற்புரையாற்றுகையில், இத்தகைய விழாக்கள் மாணவிகளிடையே மதநல்லிணக்கத்தையும், கலைத் திறன்களையும் வளர்க்க உதவும் என்று குறிப்பிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட ஆராய்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா மற்றும் நிலக்கோட்டை என்.எஸ்.வி.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிறைமதி ஆகியோர், மாணவிகளின் எதிர்கால இலக்குகள் மற்றும் வாழ்வியல் முன்னேற்றம் குறித்துச் சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன; கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடப்பட்டு, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் சாமுண்டீஸ்வரி மற்றும் கணிதத்துறைத் தலைவர் நந்தினி ஆகியோர் ஒருங்கிணைத்து நேர்த்தியாகச் செய்திருந்தனர். முடிவில், உதவிப் பேராசிரியர் ஜெனி நிர்மலா நன்றியுரை ஆற்றினார். மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்த விழா, புத்தாண்டு உற்சாகத்தோடும் கலைநயத்தோடும் நிறைவு பெற்றது.
