பாமகவின் கொடி, சின்னம் தொடர்பான அதிகாரப்பூர்வ அங்கீகார விவகாரம் குறித்து, ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பாமக எம்.எல்.ஏ அருள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் பேசியதாவது :
“பாமகவின் நிறுவனர், தலைவர் ராமதாஸ் தான். 46 ஆண்டுகளாக அவர் உழைத்துப் வளர்த்த கட்சியை யாராலும் பறிக்க முடியாது. வன்னியர் சமூகத்தின் பெரும்பாலானோர் இன்னும் அவரின் பக்கமே உள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ராமதாஸ் அவர்களுக்கு தெரியாமலே கட்சியின் முகவரி மாற்றப்பட்டு விட்டது. அதனால் தான் தேர்தல் ஆணையத்தின் கடிதம் அன்புமணி தரப்பிற்கு சென்றுள்ளது. அந்தக் கடிதத்தில் எங்கும் ‘அன்புமணி தலைமையிலான கட்சி’ என்று குறிப்பிடவில்லை. ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்றே உள்ளது. இந்தக் கடிதம் அவர்களிடம் சென்றிருப்பது தவறானது. நாங்கள் ஏற்கனவே அனுப்பிய கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை” என அருள் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது :
“பாமக என்பது லட்சக்கணக்கான வன்னிய மக்களின் உழைப்பால் உருவான கட்சி. அதை திருடி எடுக்க முடியாது. அன்புமணி விரும்பினால் புதிய கட்சி தொடங்கலாம். ஆனால், பாமகவின் கொடி, சின்னம், அடையாளம் – அனைத்தும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கே சொந்தம்” என்று வலியுறுத்தினார்.
இதனுடன், அன்புமணி தரப்பை நேரடியாக குற்றம் சாட்டிய அவர், “திருட்டுத்தனத்தால் தான் தேர்தல் ஆணையக் கடிதம் அவர்களிடம் போயுள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.