சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம். வாடகை கட்டடத்தில் தற்போது இயங்குவதால் அரசுக்கு வீண் செலவு. புதிய கட்டடம் அதே இடத்தில் கட்ட கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசு சார்பில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் விளந்திட சமுத்திரம் பாதரக்குடி, சேந்தங்குடி, ஆண்டி கோட்டம், தில்லைநத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்களை பெற வேண்டுமானால் இந்த அலுவலகத்திற்கு வந்து தான் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும். இந்நிலையில் இந்த கட்டிடம் பராமரிப்பு இன்றி தற்பொழுது செடி கொடிகள் மண்டி பாழடைந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகம் தற்போது அருகில் தற்காலிகமாக அடிப்படை வசதி இல்லாத தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே அரசு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பாழடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், விளந்திட சமுத்திரம் ஊராட்சி மன்றம் அருகில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் இருந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் சேதம் அடைந்ததால் தற்பொழுது அடிப்படை வசதி இல்லாத தனியார் இடத்திற்கு சென்று இருப்பிட சான்று, பிறப்புச் சான்று, வருமான சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே அரசு சேதம் அடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர்.

















