மயிலாடுதுறை அருகே சிறுகோவங்குடி சித்தேரியில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டுமான பணி:- நிதிப்பற்றாக்குறை காரணமாக பணிகளை தொடர முடியவில்லை என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்த நிலையில், கிராம மக்களே சொந்த செலவில் அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படாததால் அவதி:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை-திருவாரூர் மெயின்ரோட்டில் சிறுகோவங்குடி சித்தேரியில் கிராமத்தில் வசிக்கும் 8 குடும்பத்தினர், மற்றும் விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.11 லட்சம் செலவில், ஊரக வளர்ச்சித்துறையால் சிறுபாலம் கட்டுமான பணி தொடங்கியது. பின்னர், நிதிப்பற்றாக்குறை, கொரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டி ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 6 ஆண்டுகளாகியும் மீண்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், அவதிக்குள்ளாகியுள்ள பள்ளி மாணவர்கள், முதியவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராமமக்கள், அங்கு சொந்த செலவில் மூங்கில்தட்டி பாலம் அமைத்து அதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவ்வப்போது சிறுசிறு விபத்துக்கள் நடப்பதால், அச்சத்துடனே அந்த மூங்கில் பாலத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள கிராமமக்கள் அரசு இதனை கவனத்தில் கொண்டு, பாதியில் நிறுத்தப்பட்ட பாலத்தை முழுமையாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு மேலாக சிரமத்தை சந்தித்து வரும் அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த செலவில் சிறுபாலத்தை அமைத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறையினர் அனுமதி மறுப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















