மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவைச் செயல்படுத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த விசாரணையில், அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன் மற்றும் வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகினர். மதுரை மாவட்ட கலெக்டர், மாநகர காவல் ஆணையர் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் தரப்பில் தனித்தனியாகப் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மாவட்ட கலெக்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முயன்றபோது நிலவிய பதற்றமான சூழல் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கு மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் இருந்ததாலுமே பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் (முன்பு 144 தடை உத்தரவு) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தச் சூழலில் காவல்துறையினரை ஒரு தரப்பினர் தவறான வார்த்தைகளால் தாக்கியதோடு, தடுப்புகளை (Barricades) தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கிரி வாதிடுகையில், ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் மலையேற முயன்றதால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே தவிர, நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் அதிகாரிகளுக்கு இல்லை என்றும், எனவே இந்த வழக்கை கைவிட வேண்டும் என்றும் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், “சம்பவத்தன்று ஒரு காவல் அதிகாரி, ‘நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளத் தயார்’ என்று கூறியதாகச் செய்தித்தாள்களில் படித்தேன்; அவர் யார்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிகாரிகள் புன்னகையுடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஆஜராவதாகவும் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, பதற்றமான சூழலில் யாராவது அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
