சென்னை: தமிழ்நாட்டின் கடன் தொடர்பான விவாதம், சட்டப்பேரவையில் இன்று காரசாரமாக நடைபெற்றது. கூடுதல் துணை மானியக் கோரிக்கையை மையமாக வைத்து நடைபெற்ற விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை குற்றம் சாட்டினார்.
இதில், அதிமுக உறுப்பினர் தங்கமணி, தமிழகத்தின் கடன் சுமையை திமுக அரசு அதிகரித்ததாக, சமீபத்திய சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினார். வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், அரசு முறையாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த அதிமுக ஆட்சியில் கடன் சுமை 128 சதவிகிதம் அதிகரித்ததாகவும், தற்போதைய அரசு 93 சதவிகித உயர்வு மட்டுமே அனுபவிக்கிறதாகவும் விளக்கினார். மேலும், மத்திய நிதி ஆணையத்திடமிருந்து வர வேண்டிய வரிப்பங்கீட்டை பெற்றால், தமிழகத்தின் கடன் சுமை 3 லட்சம் கோடிக்கு குறைய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாக செயல்படுவதாக நிபுணர் குழுவை அமைத்தாலும் பலன் இல்லை, எனவும், திமுக கூட்டணியில் உள்ள 39 எம்பிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி நிதி பெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, தேவையெனில் பாஜக ஓரவஞ்சனையுடன் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.