கஞ்சா பழக்கத்தைக் காட்டிக்கொடுத்த சிறுவர்களுக்குக் கொடூர அடி

விருதுநகர் அருகே கஞ்சா பயன்படுத்தியதைத் தட்டிக்கேட்ட மற்றும் வீட்டில் முறையிட்ட சிறுவர்களை, சக சிறுவர்களே கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில், 18 வயதுக்கு உட்பட்ட சில சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்களது இந்தப் பழக்கம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில சிறுவர்கள் அவர்களது வீடுகளில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்கள், தகவல் சொன்ன இரண்டு சிறுவர்களையும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். “நாங்கள் கஞ்சா குடிப்பதை ஏன் வீட்டில் சொன்னாய்?” எனக் கேட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்தவர்களே வீடியோ எடுத்துள்ளனர். அதில் தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அடி வாங்கும் நபர்கள் என அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாக இருப்பதுதான் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் அண்மைக்காலமாகச் சிறுவர்கள் மற்றும் மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதையே இச்சம்பவம் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழக அரசும், காவல்துறையும் இந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக, பள்ளிச் சிறுவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version