மயிலாடுதுறை அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக தொகையினை பெற்றுக்கொண்டு, தேனீர் செலவுக்கு ரூ.150 பணம் கொடுத்தனுப்பிய ஒப்பந்ததாரர்:- வீடு கட்டப்படாததால் ரூ.72,244-ஐ திரும்ப செலுத்துமாறு வந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி ஓடக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி உலகமாதா. இவர் 2021-2022-ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி ஆணை பெற்றுள்ளார். இந்த வீட்டை கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்ததாரர் காளி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் ஒப்படைத்தனர். ஆனால், மாரியப்பன் ஒன்றரை அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் மட்டும் போட்டுவிட்டு, உலகமாதாவிடம் இருந்து, அவரது வங்கிக் கணக்கில் இரண்டு தவணைகளாக வரவு வைக்கப்பட்ட ரூ.26,029, ரூ.26,715 என மொத்தம் ரூ.52,744 மற்றும் ரூ.19500 மதிப்பிலான கட்டுமானப் பொருள்களை எடுத்துள்ளார். ஆனால், இதுவரை வீட்டுப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து வந்த கடிதத்தைக் கண்டு உலகமாதா அதிர்ந்து போயுள்ளார். அக்கடிதத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலமுறை நேரில் சென்று கேட்டும், பயனாளி வீடு கட்டும் பணியை முடிக்காததால், பயனாளிக்கு விடுவிக்கப்பட்ட நிதி மற்றும் கட்டுமானப் பொருள் கிரயத்தொகை மொத்தம் ரூ.72,244-ஐ ஒருவாரத்துக்குள் வங்கிக்கணக்கில் திரும்பச் செலுத்த வேண்டும். தவறினால் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதி வழக்கு தொடரப்படும் என்ற கடிதத்தால், மனவேதனை அடைந்த அன்பழகன்-உலகமாதா தம்பதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து அன்பழகன் கூறுகையில், இரண்டு தவணைகளாக பணம் வந்த போது எனக்கு ரூ 150 மட்டும்தான் கொடுத்தார்கள். எவ்வளவு தொகை வங்கியில் வந்தது என்பது பற்றி கூட அப்போது எனக்கு தெரியப்படுத்தவில்லை. அதிகாரிகள் முதல் அடிமட்டம் வரையில் உடந்தையாக செயல்பட்டு என்னை ஏமாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
















