மதுரை மாவட்டம், உலகத்தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா, வரும் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் திருநாளன்று மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில், பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. மடத்து கமிட்டி தலைவர் மச்சவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டியை எவ்வித இடையூறுமின்றிச் சிறப்பாக நடத்துவதற்கான பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
செய்தியாளர்களிடம் பேசிய கமிட்டி நிர்வாகிகள், இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து தொடங்கி வைக்க உள்ளதாகத் தெரிவித்தனர். அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடத்தப்படவுள்ள இப்போட்டியில், களமிறங்கும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மலைக்க வைக்கும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த காளைக்கு முதல் பரிசாக ஒரு ‘டிராக்டர்’ மற்றும் இரண்டாம் பரிசாகக் கன்றுக்குட்டியுடன் கூடிய ‘நாட்டு பசுமாடு’ வழங்கப்பட உள்ளது. அதேபோல், வீரத்துடன் மாடுகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக ஒரு ‘கார்’ மற்றும் இரண்டாம் பரிசாக ‘பைக்’ வழங்கப்பட உள்ளது. இது தவிர, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், தொலைக்காட்சி உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டுப் போட்டியில் சுமார் 900 முதல் 1000 காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விடத் திட்டமிடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், முதலில் 7 கிராமக் கரை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு மரியாதை செய்யப்படும். முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதன் வரிசைப்படியே காளைகள் அனுமதிக்கப்படும். பார்வையாளர்களின் வசதிக்காகக் கூடுதல் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வெளியூர் பயணிகளுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் சுகாதார வசதிகளைப் பாலமேடு பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மடத்து கமிட்டி சிறப்பாகச் செய்து வருகிறது.
















