மயிலாடுதுறையில் 12 அடி உயரத்தில் 11டன் எடையுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை 3 கருங்கற்சிலைகள் தென்குடிஅங்காளம்மன் சக்திபீடத்துக்கு அனுப்ப வைக்கப்பட்டன

மயிலாடுதுறையில் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட 11 டன் எடையுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உள்ளிட்ட 3 கருங்கற்சிலைகள் தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை சித்தர்காட்டில் வைத்தியநாதன் என்பவர் வேதம் கருங்கல் சிற்பக்கூடம் அமைத்து நடத்தி வருகிறார். இவரது சிற்பக்கூடத்தில் 12 அடி உயரத்தில் 11 டன் எடை கொண்ட அங்காள பரமேஸ்வரி கருங்கல் சிலை உள்ளிட்ட 3 பிரம்மாண்ட சிலைகள் உருவாக்கப்பட்டு, அவை கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக, தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்திபீடம் சேவா டிரஸ்ட் நிறுவனர் அப்புவர்மா சுவாமிகள், அறங்காவலர் காயத்ரி ஆகியோர் முன்னிலையில், அச்சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து, சிற்பி வைத்தியநாதன் கூறுகையில், தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்தி பீடத்துக்கு, அங்காளபரமேஸ்வரி, பெரியாச்சியம்மன், தாண்டேஸ்வரர் சிலைகள் மிகநுட்பமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 15 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு தற்போது 11 டன் எடையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உருவாகியுள்ளது. இதேபோல், 12 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 9 டன் எடையில் பெரியாச்சி அம்மன் சிலையும், 3 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 1.75 டன் எடை கொண்ட தாண்டேஸ்வரர் சுவாமி சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இவ்வளவு பெரிய சிலைகளில் சுதையில் மட்டுமே காணப்படும். இங்கே கருங்கல்லில் மிகநேர்த்தியாக கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும் என்றார்.

Exit mobile version