சென்னை: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவின் முக்கிய தூணாக விளங்கி வந்த ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிகாரப்பூர்வமாக டிரேட் செய்யப்பட்டார். நீண்டநாள் ரசிகர்களால் எதிர்ப்புக்குள்ளாகிய இந்த மாற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜடேஜாவுக்கு மனங்களை நெகிழவைக்கும் விதமாக சிஎஸ்கே தனது சமூக வலைதளங்களில் பிரியாவிடை வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் சேப்பாக்கம் மைதானத்தின் மேல் ஜடேஜாவின் மாபெரும் சிலை நிற்கும் காட்சியைப்போல உருவாக்கப்பட்டிருப்பது, ரசிகர்களுக்குள் பெரும் உணர்வை கிளப்பியுள்ளது. ஜடேஜாவின் சிஎஸ்கே பயணத்தை நினைவூட்டும் சிறப்பு தருணங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 2023 ஐபிஎல் இறுதியில் கடைசி இரண்டு பந்துகளில் 6, 4 அடித்து அணியை கோப்பை உயர்த்த வைத்த அதிரடி இன்னிங்ஸ் அதையடுத்து தோனி அவரை தூக்கிக் கொண்டாடிய காட்சி ரசிகர்களிடையே மீண்டும் நினைவுகளை கிளறியுள்ளது.
சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில், ஜடேஜா தனது தொடக்க கால அனுபவங்கள், அணியுடனான பயணம், மற்றும் சென்னை மக்களிடம் கொண்ட நன்றியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஜடேஜாவுடன் சேர்த்து இளம் ஆல்-ரௌண்டரான சாம் கரனும் ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக சிஎஸ்கே, விக்கெட் கீப்பர்–பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை இணைத்துள்ளது. தோனியின் வெற்றிடத்தை நிரப்பும் வீரராக சாம்சன் பார்க்கப்படுகிறாரெனினும், ஜடேஜாவின் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் பெரிய கேள்வியில் உள்ளனர்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், கடந்த சீசனில் ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்ட ஜடேஜா, ராஜஸ்தானில் ரூ.14 கோடி ஊதியத்தில் இணைகிறார். இது, அணிக்காக அவர் தன்னார்வத்துடன் மேற்கொண்ட தியாகமாகவே பார்க்கப்படுகிறது.
வீடியோவும், ஸ்டேச்சு காட்சியும் வெளிவந்துள்ள நிலையில், சென்னை முழுவதும் ‘தளபதி’ ஜடேஜாவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை செலுத்தி வருகிறார்கள். “ஜடேஜா–சிஎஸ்கே பிணைப்பு எப்போதும் நிலைத்திருக்கும்” என்ற மெசேஜ்களும் பரவலாக வெளிப்படுகின்றன.
















