வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் தொடங்க உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காமல் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
பொதுச் சபையின் உயர்மட்ட பொது விவாதங்கள் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறுகின்றன. பாரம்பரியமாக, முதலில் பிரேசில் தலைவர் உரையாற்றுகிறார். அதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றுவார். இந்த அமர்வில் இந்தியாவும் பங்கேற்கிறது.
ஆனால், அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாத நிலையில், பிரதமர் மோடி நியூயார்க் சென்றால் டிரம்புடன் நேரடி சந்திப்பு தவிர்க்க முடியாத சூழல் உருவாகும். இந்நிலையில், அரசியல் சிக்கலை தவிர்க்கும் நோக்கில், பிரதமர் மோடி இந்த முறை பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதாக மத்திய அரசு கருதியுள்ளது.
இதனால், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவின் சார்பில் உரையாற்ற உள்ளார். அவர் செப்டம்பர் 26ஆம் தேதி பொதுச் சபையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.