திமுக ஆட்சியில் ஹிந்து கோவில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.
இந்திய ஹிந்து கோவில்களின் மேலாண்மை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடவுள் இல்லை எனக் கூறும் திமுக, இன்று 40,000 ஹிந்து கோவில்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உண்டியல் வருவாயை மட்டும் அறநிலையத்துறை எடுத்து செல்கிறது; ஆனால் கோவில்கள் சரியான பராமரிப்பு பெறவில்லை. பூசாரிகளுக்கு உரிய சம்பளமும் வழங்கப்படுவதில்லை,” என்றார்.
அவர் மேலும், “திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளது; கான்கிரீட் தளங்கள் பெயர்ந்துவிட்டன. தமிழகத்தில் சுமார் 9,500 கோவில்களுக்கு இதுவரை சரியான கணக்கே வழங்கப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. திமுக அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்கள் அளித்த காணிக்கையில் நடத்தப்பட்டது; அதற்கும் கணக்கு தரப்படவில்லை,” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “கணக்கு காட்டாத அறநிலையத்துறைக்கு எதிராக ஹிந்துக்கள் வீதிக்கு வரவேண்டும். வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில், ‘நம்ம சுவாமி – நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்!’ என்ற தீமில் விழா நடைபெறும்,” என எச்.ராஜா தெரிவித்தார்.

















