திருநெல்வேலி தச்சநல்லூரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தென்மண்டல மாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெரிபேர்டில் தரையிறங்கினார்.
சரியாக மாலை 4 மணிக்கு அமித்ஷா பாளையங்கோட்டைக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநாடு திடலுக்கு சென்றார் மாநாட்டில் சுமார் 50 நிமிடம் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து பெருமாள்புரம் புனித தாமஸ் தெருவில் உள்ள மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு அமித்ஷாக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த பிரபல தனியார் ஓட்டல் நிறுவனத்தில் இருந்து தேநீர் விருந்துக்கான உணவு பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. அமித்ஷாவுக்காக திருநெல்வேலி அல்வா குழிப்பணியாரம் மூதிலட்டு ரோஸ் பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளும் தட்டாம் பயிறு சுண்டல் வேர்க்கடலை போன்ற பயிர் வகைகள் பில்டர் காபி, லெமன் டீ, போன்ற டீ வகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக மாலை 5.35 மணிக்கு அமித்ஷா நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்ற தேனீர் விருந்தில் பங்கேற்றார். அமித்ஷாவுடன் அவரது காரின் பின்புறம் அண்ணாமலை அமர்ந்திருந்தார் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அமித் ஷாவுக்கு மங்கல இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை சற்று தயங்கி ஓரமாக நின்றபோது அமித்ஷா அவரது கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
முன்னதாக அமித் ஷாவின் வருகை தாமதமானதால் இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது திட்டப்படி அமித்ஷா ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கியவுடன் முதலில் தேனீர் அருந்திவிட்டு தான் மாநாடுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் மாநாட்டை முடித்துவிட்டு அதன் பிறகு தேநீர் விருந்தில் பங்கேற்றார். தேநீர் விருந்துக்காக அமித் ஷாவின் ஹெலிகாப்டர் பயணமும் ரத்து செய்யப்பட்டது. எனவே சாலை மார்க்கமாக அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து இந்திய விமானப்படையின் விமானம் மூலம் டெல்லி சென்றார்.