மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வட்டத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, மாவட்டத் தலைவர் அருள் பெருமாள் கலந்து கொண்டு மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ஜவகர் மாவட்ட இணைச் செயலாளர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள், துறைச்சங்க மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
