2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி நாளை மாலை திருவாரூரில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்..
தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முழுவதும் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக நாளை மாலை 5 மணி அளவில் திருவாரூர் ஆழித்தேரோடும் தெற்கு வீதியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருவாரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அமைச்சர் டி ஆர் பி ராஜா, கூட்டணி கட்சியான சிபிஐ சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் வேட்பாளர் மாரிமுத்து, மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முஹம்மது முபாரக் ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் மாபெரும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் நகராட்சி எதிரே பிரம்மாண்ட மேடை அமைக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாலை நேரத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுவதால் உயர் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள், நாற்காலிகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருவாரூர் நகரக் கழக செயலாளர் வாரை பிரகாஷ், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சேகர் கலியபெருமாள் உள்ளிட்டோர் முன்னின்று மேடை அமைக்கும் பணிகளை நடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல் முறையாக திருவாரூரில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் திருவாரூர் தெற்கு வீதியில் பொதுக்கூட்ட மேடைகள் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

















