தருமபுரம் ஆதீன மடாதிபதியை தமிழக வேளாண்துறை அமைச்சர் சந்தித்து அருளாசி பெற்றார்:- அண்டை மாநிலங்களில் உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேகதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார், என பேட்டி:-
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் சந்தித்து ஆசிபெற்று ஆதீனகர்த்தருடன் கலந்துரையாடினார். தருமபுரம் ஆதீனகர்த்தர் கூறுகையில், கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகம் விழாவை, வடநாட்டில் கொண்டாடப்படுவதைப் போன்று செம்மையாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் சார்ந்த பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கு முந்தைய ஆட்சியில் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தோம், மத்திய அரசின் திட்டத்தில் வேளாண் கல்லூரி தொடங்க விண்ணப்பம் செய்துள்ளோம். தமிழக அரசு வேளாண் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி அளித்தால் அதற்கான இடங்களை வழங்குவதற்கு தயாராக உள்ளோம். நெல் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கு ஆதீன கோயில் இடங்களில் வழங்கியுள்ளோம். அண்டை மாநிலங்களில் இருந்து தானியங்களை வாங்குவதை கைவிட்டு, நமது மாநில உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளின் உழைப்பை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
பின்னர் அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிகொடுப்போம். கடந்த ஆட்சிகாலத்தில் அன்டைமாநிலங்களில் உணவு தானியங்கள் கொள்முதல் செய்துள்ளனர். அதனை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு மேகதாட்டில் அணைகட்டுவதை தடுக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். உரம் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தமிழக முதல்வர் வலியுறுத்துவார் என்றார். இதில் தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
