தமிழக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவாக சம்பளம் பெறுகிறார்கள்.
இந்த நிலையில், “சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்” எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஒப்பந்த செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
கடும் கண்டனம்
இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு, தமிழக அரசை கடுமையாக கண்டித்தது. “ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரமாக்கவும் மறுக்கிறீர்கள் ! சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள் ! இது உழைப்பை சுரண்டுவது போல இருக்கிறது” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக அரசு தரப்பில், “மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது” என்று விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் அதை ஏற்க மறுத்து, “எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லாதீர்கள். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது உங்கள் பொறுப்பு. இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது, ஆனால் வேலை செய்பவர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினர்.
தேர்தல் செலவை சுட்டிக்காட்டல்
மேலும், “ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள் என்பதை கூறுங்கள். ஆனால், செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது” என உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம் செய்தது.
வழக்கு ஒத்திவைப்பு
இது தொடர்பாக மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என்றும், தமிழக எம்.ஆர்.பி செவிலியர் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.