சென்னை: முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை சுட்டுக் கொன்ற வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 4ஆவது குற்றவாளி ஜெயில்தார் சிங் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டார்.
2005 ஜனவரி 9ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த சுதர்சனம், கதவைக் கொட்டிய சத்தத்தைக் கேட்டு கீழே வந்த போது, முகமூடியுடன் நுழைந்த பவாரியா கொள்ளையர்களை பார்த்து கத்தினார். இதையடுத்து கொள்ளையர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்று, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சுதர்சனம் மட்டுமின்றி, அவரது மனைவி மற்றும் மகனும் தாக்குதலுக்கு உள்ளானது அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவத்துக்குப் பிறகு அதற்கான விசாரணையை தீவிரப்படுத்த அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறப்பு படையை அமைக்க உத்தரவிட்டார். ஐஜி ஜாங்கிட் தலைமையிலான அந்த படை, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்தது. இவர்களில் சிலர் ஜாமீனில் வெளியேறி தலைமறைவாகியதுடன், 2 பேர் சிறையில் உயிரிழந்தனர்.
20 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, தற்போது சிறையில் இருந்த ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜாமீனில் இருந்து வழக்கை சந்தித்த ஜெயில்தார் சிங் ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜரானனர். இதில் முதல் மூவர் குற்றவாளிகள் என நிரூபித்த நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
பவாரியா கும்பல் தலைவன் ஓம் பிரகாஷின் மருமகனான ஜெயில்தார் சிங், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்து கும்பலுக்கு பங்கிட்டதாக போலீசார் கூறியிருந்தாலும், சுதர்சனம் கொலை வழக்கில் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, சுதர்சனம் குடும்பத்தாரின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு பதிலளித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.















