மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் அறுவடை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. செப்.1-ஆம் தேதி முதல் 2025-2026-ஆம் ஆண்டு காரிப் பருவத்திற்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட புதிய விலையில் கொள்முதல் நடைபெற்றுவரும் நிலையில், ஏறத்தாழ அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இயக்கம் செய்யப்படாமல் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கமடைந்தன. ஓவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5,000 முதல் 10,000 நெல் மூட்டைகள் வரை தேக்கமடைந்திருப்பதாகவும், இதனால் புதிதாக கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். டெல்டா மாவட்டம் முழுவதும் இந்த நிலை காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் அனைத்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியருடன் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் விளைவித்த நெல்மணிகள், சிந்தாமல் சிதறாமல் உலைக்குப் போகும் வரை உன்னத தன்மையுடன் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் சத்யபிரதாப் சாகு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை அருகே மணக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் ஈரப்பதத்தை நேரடியாக கள ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் மூட்டைகள் போட்டதற்கான பணம் வந்து விட்டதா என்று கேட்டறிந்தார். விவசாயி ஒருவர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெல் உலர்த்தும் களம் அமைத்து தர கோரிக்கை விடுத்தார்.
