மதுரையின் கல்விச் சேவையில் தடம் பதித்து வரும் சி.இ.ஓ.ஏ (CEOA) பள்ளியின் 31-வது ஆண்டு விழா நேற்று மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாகவும், கலைநயத்துடனும் நடைபெற்றது. இந்த விழாவிற்குத் திரைத்துறையின் முன்னணி சண்டைப் பயிற்சியாளரும், கலைமாமணி விருது பெற்றவருமான ஜாகுவார் தங்கம் மற்றும் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஜய் விகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் உரையாற்றிய ஜாகுவார் தங்கம், சி.இ.ஓ.ஏ பள்ளியின் வியக்கத்தக்க வளர்ச்சியையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வியையும் வெகுவாகப் பாராட்டினார். மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவமான திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று தனது உத்வேகமான பேச்சின் மூலம் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், பாடவாரியாக நூற்றுக்கு நூறு (Centum) மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கும் சுமார் 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் மற்றும் பணமுடிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பள்ளித் தலைவர் இராசா கிளைமாக்ஸ் தனது உரையில், மருத்துவப் படிப்பிற்கான NEET மற்றும் பொறியியல் படிப்பிற்கான JEE உள்ளிட்ட அனைத்து விதமான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கும், மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு மிகக் குறைந்த கட்டணத்தில் பள்ளியிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார். மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்தி இத்தகைய சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுவதால் பெற்றோர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த விழாவில் பள்ளித் தலைவர் இராசா கிளைமாக்ஸ், செயல் தலைவர் இ.சாமி, இயக்குநர்கள் விக்டர் தனராஜ், சௌந்திரபாண்டி, அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், ஜெயசந்திரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பள்ளி தாளாளர் ஜெனிட்டா, முதுநிலை முதல்வர் கலா, முதல்வர்கள் மஞ்சுளா, கோடீஸ்வரி மற்றும் காரியாபட்டி, மேலூர், சாத்தூர், தேனி, இடையமேலூர் ஆகிய சி.இ.ஓ.ஏ கிளைப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் பங்கேற்றனர். விழாவின் இறுதிப் பகுதியாக மாணவ-மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட திறமைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன், 31-வது ஆண்டு விழாவிற்கு ஒரு முத்தாய்ப்பான நிறைவைத் தந்தது.
