மயிலாடுதுறையில் நடந்த குழந்தைகள் தொடர்பான குற்றச்செயல் சம்பவம் சமூகத்திலும் கல்வி வளாகங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்-2 வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவியொருவரை, அதே வகுப்பில் உள்ள மாணவனொருவர் கர்ப்பமாக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலில் இருந்ததாக தெரியவந்த நிலையில், சமீபத்தில் மாணவியிடம் உடல் நலக்குறைவு காணப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையில், அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், சம்பவம் குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாரும், குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பள்ளியில் படிக்கும் சக மாணவனே கர்ப்பத்திற்குப் பொறுப்பானவர் என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவியால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மாணவன் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இன்றைய டீனேஜ் காதல் விவகாரங்கள் மாணவர்கள் எதிர்காலத்தை மிக தீவிரமாக பாதிக்கும் நிலையை அடைந்து வருகின்றன. அழகு, பைக், ஸ்டைல் போன்ற மேல் தோற்றங்களை மட்டுமே பார்த்து காதலில் விழும் பல மாணவிகள், வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் தவறான முடிவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், இளமை காதலின் மீது தவறான புரிதல்களுடன் செயல்படும் மாணவனும், காதல் என்பது தான் வாழ்க்கையின் எல்லாமே என்று எண்ணி, சட்ட சிக்கல்களில் சிக்கி எதிர்காலத்தை நாசமாக்கிக் கொள்கிறார்கள்.
இத்தகைய வழக்குகள் மத்தியில், டீனேஜ் காதல் சம்பவங்களில் உள்ள சட்டங்களைக் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.