தெருநாய்கள் பிரச்னையில் அரசின் செயலற்ற தன்மையால் நிலைமை மோசமடைந்துள்ளதாக உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
வெறிநாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோய் தொற்று அதிகரித்து, பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இரு தினங்களுக்கு முன், ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மஹாதேவன் அடங்கிய அமர்வு, தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு இருந்தாலும், சில தரப்புகளில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, தலைமை நீதிபதி கவாய், புதிய அமர்வை அமைத்தார். நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் தலைமையிலான அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.
டெல்லி அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாய் கடித்த பின் ரேபிஸ் தொற்று காரணமாக குழந்தைகள் பலர் உயிரிழக்கின்றனர். தடுப்பூசி போட்டாலும், நாய்கள் மனிதர்களை கடிப்பதைத் தடுக்க முடியாது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன” என்றார்.
அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் செயலற்ற தன்மை தெருநாய்கள் பிரச்னைக்கு காரணம் எனக் குறிப்பிட்டனர். மேலும், விலங்கு ஆர்வலர்களிடம், தெருநாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என எச்சரித்தனர்.
வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.