சென்னை :
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 4 தெருநாய்கள் கூட்டமாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் வசித்து வரும் பால சௌந்தர்யா என்ற மூதாட்டி நேற்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, திடீரென 4 தெருநாய்கள் அவரை துரத்தி விரட்டியதாக கூறப்படுகிறது. தப்பிச் செல்ல முயன்ற மூதாட்டியை நாய்கள் கீழே தள்ளி கடித்ததில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பிலும் தெருநாய் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் தலைமை காவலர் சங்கரின் மனைவி ரம்யா நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, சுற்றித்திரிந்த நாய் ஒன்று அவரை துரத்திச் சென்று இடது காலில் கடித்தது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ச்சியாக தெருநாய் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 13 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாய்க்கடி சம்பவங்களில் நாடு முழுவதும் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
			















