திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சண்முகவேல் மீது கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மடத்துக்குளம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு உடுமலை அருகே குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை பராமரிக்கும் பணியில் மூர்த்தியின் குடும்பம் தங்கி வந்தது. நேற்று இரவு மூர்த்தியின் மகன்கள் தங்கப்பாண்டி உள்ளிட்ட மூவருக்கும் இடையில் கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சண்டையைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜா சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் மூவரையும் விசாரணை நடத்திய போது, திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகர சூழலில் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். இவரை காப்பாற்ற முடியாத காவலர் அழகுராஜா தப்பி ஓடி உயிருக்குப் போராடியுள்ளார்.
சம்பவ தகவலின் பேரில், மேற்கு மண்டல டிஐஜி சசிமோகன், திருப்பூர் எஸ்பி யாதவ கிரீஸ் அசோக் மற்றும் டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹண்டர், டெவில் என இரண்டு மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த கொடூரக் கொலை சம்பவம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனின் தோட்டத்தில் நடந்திருப்பது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் நிதியுதவி அறிவிப்பு
சண்முகவேலின் உயிரிழப்பால் காவல்துறைக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு தலைமைச்செயலாளர் வழியாக கடும் உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.