மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது மடாதிபதியான ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆவது வயதை முன்னிட்டு மணிவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக பத்து நாள் ஆன்மீக மாநாடு கடந்த ஒன்றாம் தேதி துவங்கி தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்று வரும் நிலையில், இன்று பெங்களூரு மதுசூதனன் சாய் குளோபல் மனிதநேய இயக்கத்தின் நிறுவனர் ஸ்ரீ மதுசூதனன் சாய் தருமபுரத்திற்கு வருகை புரிந்தார். பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கினார். அவருக்கு சீர்காழி தமிழ்ச் சங்கத் தலைவர் இமயவரம்பன் மார்க்கோனி, நீதிபதி கார்த்திக், ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஹெலிப்பேட்டில் ஆதீனம் சார்பில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தருமபுரம் மடத்தில் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு நினைவு பரிசும், பொன்னாடையும் ஆதீன மடாதிபதி வழங்கினார். தொடர்ந்து
திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு ஆதீனம் சார்பில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மடாதிபதி மற்றும், மதுசூதனன் சாய் ஆகிய இருவரும் இணைந்து வழங்கினர்.
தொடர்ந்து விழாவில் பேசிய ஸ்ரீ மதுசூதனன் சாய், பிறருக்காக வாழும் மரம், நதி போல குரு மகா சன்னிதானம் மனித குலத்திற்காக உழைக்கிறார். சனாதன தர்மம் மட்டுமின்றி கல்விச்சேவை, மருத்துவ சேவை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார் என்று பாராட்டி பேசினார். ஸ்ரீ மதுசூதனன் சாய் குளோபல் மனிதநேய இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விழாவில் நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்

















