கொழும்பு : கச்சத்தீவு தொடர்பாக தமிழக நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் வெளியிட்ட கருத்துக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் மதுரையில் த.வெ.க. மாநில மாநாட்டில் பேசிய விஜய், “தமிழக மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிரந்தர பாதுகாப்பு கிடைக்க, கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத், “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்த நிலை ஒருபோதும் மாறாது; எதிர்காலத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியாகவே இருக்கும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது :
“தமிழகத்தில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பிரச்சினையை அரசியல் கட்சிகள் முன்வைப்பது வழக்கமானது. இது புதியது அல்ல; கடந்த காலங்களிலும் பல அரசியல் தலைவர்கள் இதுபோன்று பேசியுள்ளனர். எனவே, விஜயின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது தூதரக ரீதியான கருத்துகளே. இந்திய அரசாங்கம் அல்லது தூதரகங்கள் இதுவரை கச்சத்தீவை மீட்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய தரப்பில் இருந்து இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.