கேரளாவில் சமீபமாக மூளைத்திசுக்களை பாதிக்கும் அமீபா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே கவலை உருவாகியுள்ளது. குறிப்பாக சபரிமலைக்கு செல்லத் தயாராக இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இதனால் எந்தவித ஆபத்தும் உள்ளதா என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதுகுறித்து தெளிவான விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அமீபா தொற்றுக்கும் சபரிமலை தரிசனத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தினார்.
அமீபா பொதுவாக நீண்ட நாட்கள் சுத்தம் செய்யப்படாத, நின்று போன நீர்நிலைகளில் வளரக்கூடியதாம். குளங்கள், குட்டைகள், அசுத்தமான நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் தண்ணீர் மாசடைந்தால் இந்த நுண்ணுயிரி உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது. அந்த நீர் மூக்கின் வழியாக உடலிற்குள் சென்றால் மூளைத்திசுக்களை தாக்கி கடுமையான உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும்.
அவர் மேலும் கூறியதாவது: “ஆற்று நீர் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பதால், அதில் இவ்வகை அமீபா உயிர்வாழ முடியாது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பா உள்ளிட்ட ஆறுகளில் குளிப்பது பழக்கமாக உள்ளது. அத்தகைய ஓடும் நீரில் எந்தவித அபாயமும் இல்லை. பிரச்சனை ஏற்படக்கூடியது நின்று கிடக்கும், சுத்தம் செய்யப்படாத நீரில் மட்டுமே” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த அமீபா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் அல்ல என்றும், அதற்காக தேவையில்லாத பயமும் பரபரப்பும் வேண்டாமெனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு அனைத்துப் பகுதிகளிலும் அசுத்தமான நீர் நிலைகளை மதிப்பாய்வு செய்து சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தேங்கிய நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீச்சல் குளங்களில் குளோரின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மருத்துவமனைகளில் மூளை அழற்சி அல்லது அதனை ஒத்த அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் தீவிர கண்காணிப்பில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அரசின் வழிகாட்டுதல் வலியுறுத்துகிறது.

















