சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில், பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் திருத்தலத்தில் ஆண்டுதோறும் மார்கழி மண்டல பூஜையை முன்னிட்டு நடைபெறும் ‘முள் படுக்கை தவக்கோல’ நிகழ்வு நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக முத்துமாரியம்மனுக்குப் பணிவிடை செய்து வரும் 62 வயது நாகராணி அம்மையார், இந்த ஆண்டும் தனது கடினமான விரதத்தின் ஒரு பகுதியாக முள் படுக்கையில் ஏறி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். பொதுவாகச் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இக்கோயிலில், மார்கழி மாத மண்டல பூஜை என்பது சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கும் முக்கிய விழாவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு, மார்கழி 18-ஆம் நாள் முதல் 45 நாட்கள் கடும் விரதத்தைத் தொடங்கிய நாகராணி அம்மையார், நேற்று தனது தவக்கோலத்தைத் தொடங்கினார். இதற்காகக் கோயில் வளாகத்தின் முன்பகுதியில் சுமார் 7 அடி உயரத்திற்குப் பிரம்மாண்டமான முள் படுக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. காட்டுக்கத்தாழை, சப்பாத்தி கள்ளி, கருவேல மர முட்கள் மற்றும் கூர்மையான உடைமுட்கள் எனப் பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் அடுக்கப்பட்டிருந்த அந்த முள் மேடையில் அமர்ந்து தவம் செய்வது இப்பகுதியின் தனித்துவமான வழிபாட்டு முறையாகும். நேற்று காலை 9:00 மணி முதல் முத்துமாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன.
மதியம் 1:00 மணியளவில், புனித நீராடி வந்த நாகராணி அம்மையார், விநாயகப் பெருமானை வழிபட்டுப் பின்னர் முத்துமாரியம்மனை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் முள் படுக்கைக்குக் கற்பூர தீபாராதனை காட்டப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்களின் ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே, நாகராணி அம்மையார் லாவகமாக 7 அடி உயர முள் படுக்கையில் ஏறி அமர்ந்து சாமியாடினார். அந்த நிலையிலேயே நீண்ட நேரம் அமர்ந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு அருள்வாக்கு வழங்கிய அந்தத் தவக்கோலம் காண்போரைக் சிலிர்க்க வைத்தது. திருப்புவனம், மானாமதுரை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அதிசய நிகழ்வைக் கண்டு தரிசித்தனர். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
















