நிதி மோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய தேவநாதனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் தேவநாதன். அவர் தனது நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தேவநாதன் உள்பட ஆறு பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், தேவநாதனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அக்டோபர் 30 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அதன்படி, ரூ.100 கோடி டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்றும், விசாரணைக்குத் தேவையானபோது ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளை பாதிக்கக்கூடாது என்றும், மாநிலத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தேவநாதன், உயர்நீதிமன்றம் விதித்த எந்த நிபந்தனைகளையும் நிறைவேற்றவில்லை என முதலீட்டாளர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
அந்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், தேவநாதன் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாகக் கண்டறிந்து, அவரை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
