மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலையில் அமைந்திருப்பதாலும், அதைச் சுற்றி வனப்பகுதி இருப்பதாலும், வனவிலங்குகளின் நடமாட்டம் காரணமாக வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தினமும் மாலை 4 மணிக்குப் பிறகு மலையேற அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கே நடை அடைக்கப்படுகிறது. எனவே, இரவு நேரங்களில் தரிசனம் செய்ய இயலாது.
ஆனால், மகா சிவராத்திரி தினத்தில் மட்டும் பக்தர்களுக்கு இரவு முழுவதும் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நாளில் கோவிலில் விடிய, விடிய பூஜைகள் நடைபெறுகின்றன. மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறும். கடந்த வருடம் மகா சிவராத்திரியில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் இரவு மலையேறி தரிசனம் செய்துள்ளனர்.
மகா சிவராத்திரியின் மகத்துவம்
மாசி மாத சிவராத்திரிதான் “மகா சிவராத்திரி” எனப்படுகிறது. புராணக் கதைகளின்படி, பார்வதி தேவியே அந்த இரவில் சிவபெருமானை நினைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தார். இதனால் அன்றைய தினத்தில் விரதம் இருந்து, பக்தியுடன் வழிபடுவோர் பாவநிவாரணம் பெற்று முக்தியடைவார்கள் என நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறும்:
முதல் காலம்: மாலை 6 மணி – இரவு 9 மணி
இரண்டாம் காலம்: இரவு 9 மணி – நள்ளிரவு 12 மணி
மூன்றாம் காலம்: நள்ளிரவு 12 மணி – அதிகாலை 3 மணி
நான்காம் காலம்: அதிகாலை 3 மணி – காலை 6 மணி
இந்த நான்கு கால பூஜைகளிலும் அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் நடைபெறும். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து “சிவாய நம” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலம் பாவநிவாரணம் பெற்று, சிவனருளைப் பெறுவார்கள் என கூறப்படுகிறது.