கவுகாத்தி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, 2–0 என தொடரை வெற்றி பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்ற பெருமையை மீண்டும் எட்டியுள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்ரிக்கா, முதல் டெஸ்டை ஏற்கனவே கைப்பற்றி முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் அசாமின் கவுகாத்தி பர்சாபரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 489 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் இந்தியா 201 ரன் மட்டுமே எடுத்ததால், விருந்தினர் அணி சிறப்பான 288 ரன் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்சில் அந்த முன்னிலையை வலுப்படுத்திய தென்ஆப்ரிக்கா 5 விக்கெட்டுக்கு 260 ரன் எடுத்ததும், இன்னிங்சை டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 549 ரன் என்ற மலைப்போன்ற இலக்கை அமைத்தது. ஸ்டப்ஸ் 94 ரனுடன் சிறப்பாக விளங்கினார். இந்திய பக்கத்தில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்திய பேட்டிங் சரிவு
கடைசி நாளில் குறைந்தது தாக்குபிடித்து டிராவை நோக்கிச் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் இந்தியா களமிறங்கியது. ஆனால் அந்நம்பிக்கை விரைவிலேயே சிதறியது. துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (13), கே.எல்.ராகுல் (6) விரைவில் வெளியேறினர். ஜடேஜா மட்டும் தன்னம்பிக்கையுடன் 54 ரன் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக சரிந்ததால், இந்திய அணி 140 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பந்துவீச்சில் ஆப்ரிக்காவின் ஆதிக்கம்
ஹார்மர் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணியின் நிலையை மேலும் சிக்கலாக்கினார். மகாராஜ் 2 விக்கெட்டுகள் பெற்றார். மார்கோ ஜான்சன் மற்றும் முத்துச்சாமி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
வரலாறு புதுப்பித்த தென்ஆப்ரிக்கா
இந்த வெற்றியால் தென்ஆப்ரிக்கா 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடர் வென்ற அபூர்வ சாதனை படைத்துள்ளது.
















