தூங்கிக்கொண்டிருந்த செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை – குடவாசல் அருகே பரபரப்பு..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுகம் (48). செங்கல் சூளையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்த இவருக்கு சுதா (40) என்ற மனைவியும், சுமன் (16) என்ற மகனும், தியாசின் (14) என்ற மகளும் உள்ளனர். நேற்று வழக்கம்போல் வேலை முடித்து வீட்டிற்கு வந்த திருமுகம், குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டதால் அவர் மற்றும் குடும்பத்தினர் விழித்துள்ளனர். அப்போது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த நான்கு மர்மநபர்கள், அரிவாளால் திருமுகத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் திருமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி சுதாவுக்கும் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைத் தொடர்ந்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடவாசல் போலீசார், திருமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சுதா, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு மர்மநபர்களை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து செங்கல் சூளை மேஸ்திரியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் சேங்காலிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
