சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற நடுக்கத்தை ஏற்படுத்திய கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சிவகங்கை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பினை வழங்கியுள்ளது. சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த சிங்காரம் செட்டியார் (78) மற்றும் அவரது மனைவி சரோஜா என்ற அழகம்மை (70) தம்பதியினர் வீட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (40) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். ஜெயலட்சுமி, அறந்தாங்கியைச் சேர்ந்த சித்திரைச்செல்வம் (39) என்பவரைக் காதலித்து வந்த நிலையில், சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த பூமிநாதன் மனைவி கலையரசியிடம் வாங்கிய 1.50 லட்ச ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், சிங்காரம் செட்டியார் வீட்டிலேயே கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக சித்திரைச்செல்வம், தனது நண்பர்களான ராஜாங்கம் (39), பிரபு (42) மற்றும் பிரபு என்ற பிரபாகரன் (37) ஆகியோருடன் இணைந்து, 2012 மார்ச் 13-ஆம் தேதி இரவு ஜெயலட்சுமியின் உதவியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
அப்போது தம்பதியினரைக் கட்டிப்போட்டு 372 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்தபோது, அழகம்மை தங்களை அடையாளம் கண்டுவிட்டதால், ஆத்திரமடைந்த கும்பல் அவரது வாயைத் துணியால் அடைத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சித்திரைச்செல்வம், ஜெயலட்சுமி உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றம் சாட்டப்பட்ட சித்திரைச்செல்வம், ராஜாங்கம், பிரபு, பிரபு என்ற பிரபாகரன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்தச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த ஜெயலட்சுமிக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூமிநாதன் மனைவி கலையரசி மற்றும் நாகராஜ் மனைவி கலையரசி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த நீதி, மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















