பெங்களூரு : மனைவியின் உடல்நிலை குறைபாட்டை மறைத்தது குறித்து கோபம் அடைந்த கணவர், அளவுக்கு மீறி மயக்க மருந்து செலுத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி (34) ஒரு மருத்துவர். இவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதத்தில் அதே மருத்துவமனையில் பணியாற்றிய தோல் மருத்துவர் கிருத்திகா ரெட்டி (28) என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே கிருத்திகாவுக்கு அஜீரணம், நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் இருப்பதை மகேந்திராவுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகாவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. தந்தை வீட்டில் இருந்தபோது, கணவர் மகேந்திரா அவருக்கு ஐ.வி. மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. முதல்நாளே கடும் வலியால் அவதிப்பட்ட கிருத்திகா, மருந்தை நிறுத்த விரும்பியதாகவும், ஆனால் மகேந்திரா “இன்னும் ஒரு நாள் போட்டால் நலம் பெறுவாய்” என்று கூறி தொடர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் நாளில் மயக்கம் அடைந்த கிருத்திகாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கிருத்திகாவின் சகோதரி நிகிதா ரெட்டி (மருத்துவர்) அளித்த புகாரின் பேரில், முதலில் இயற்கைக்கு மாறான மரணமாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், மகேந்திரா பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டாலும், போலீசார் மறுத்து விசாரணை மேற்கொண்டனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிக அளவு மயக்க மருந்து செலுத்திய தடயங்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, கிருத்திகாவின் தந்தை முனி ரெட்டி மீண்டும் புகார் அளித்தார்.
மாரத்தஹள்ளி போலீசார் கொலை வழக்காக மாற்றி, உடுப்பி மாவட்ட மணிப்பாலில் ஒளிந்திருந்த மகேந்திராவை கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் உடல்நல குறைபாடுகளை மறைத்தது குறித்து கோபத்தில் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மகேந்திரா ரெட்டியின் குடும்பத்தினர் மீது இதற்கு முன்பும் பல குற்றவியல் வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவம் உயிர் காப்பதற்கான துறை. ஆனால் அதையே தவறாக பயன்படுத்தி உயிரை பறித்திருப்பது சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.