ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மேலும் பதட்டமடைந்தன.
இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் இனி நடைபெறாது என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதன் பின்னணியில், 2025 ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் இந்த டி20 ஆசியக் கோப்பையில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகியவை ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகியவை பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி தொடர்பாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட வேண்டுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
“பிசிசிஐ, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது. தற்போதைய வழிகாட்டுதலின் படி, பன்னாட்டு போட்டிகளில் இந்தியா நட்புறவு இல்லாத நாடுகளுக்கு எதிராக விளையாடலாம். ஆனால் இருதரப்பு தொடர்களில் மட்டுமே அது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை என்பது பன்னாட்டு தொடர் என்பதால் இந்தியா பங்கேற்க வேண்டும். அதேபோல, ஐசிசி போட்டிகளிலும், எதிர்ப்புற நாடுகள் இருந்தாலும் இந்தியா கட்டாயம் விளையாட வேண்டியது தான். ஆனால், தனிப்பட்ட இருதரப்பு தொடரில் இந்தியா எந்தவொரு விரோத நாட்டுடனும் விளையாடாது” என சைகியா தெளிவுபடுத்தினார்.