பல ஆண்டுகளாக திருவாரூர் வழியாக இயக்கப்படும் காரைக்கால் – சென்னை விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் 5000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நாள் முழுவதும் கடையடைப்பு போராட்டம்…
தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் ரயில் நிலையம் கடந்த 1861 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 165 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் இந்த திருவாரூர் ரயில் நிலையம் வழியாக, தினமும் இரவில் சென்னை செல்வதற்கு வசதியாக காரைக்கால் – சென்னை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கம்பன் விரைவு ரயில் என்ற பெயரில் இயக்கப்பட்டு வரும் இந்த காரைக்கால் – சென்னை விரைவு ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரும் மே 20 ஆம் தேதி முதல் இந்த ரயிலானது திருவாரூர் வழியாக இயக்கப்படாமல், பேரளம் வழியாக காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக திருவாரூர் சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வரும் காரைக்கால் சென்னை விரைவு ரயிலை திருவாரூர் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு வேறு பாதைக்கு மாற்றிய தென்னக ரயில்வே முடிவுக்கு திருவாரூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் – சென்னை விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து திருவாரூர் வழியாகவே இயக்க வலியுறுத்தி இன்று திருவாரூர் முழுவதும் உள்ள 5000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
