கரூர்: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த துயரச்சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. யாரிடமும் குறை கூறும் நோக்கம் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு குடிநீர் பாட்டில் அல்லது பிஸ்கட் பாக்கெட்டுகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட வழங்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “காலையிலிருந்து மக்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியிருந்தால் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. இனி எங்கும், எப்போதும் இப்படியான விபத்துகள் நிகழாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்கும்” என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.