தர்மஸ்தளா பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பான புகார் : முன்னாள் சுகாதார ஊழியரிடம் இருந்து அதிர்ச்சி தகவல் !

கர்நாடகாவின் தர்மஸ்தளா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகு கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1995 முதல் 2014 வரை தர்மஸ்தளா பகுதியில் சுகாதார ஊழியராக பணியாற்றிய அந்தப் பெண், “பல கொடூரமான கொலைகளை நேரில் கண்டேன். பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்களை சில நேரங்களில் டீசல் ஊற்றி எரிக்கவும், சிலரைக் கிராமம் சுற்றியுள்ள இடங்களில் புதைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டேன்” என புகாரில் தெரிவித்துள்ளார்.

1998ஆம் ஆண்டு இந்த பயங்கர நிகழ்வுகளை வெளிக்கொணர முயன்ற போது, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு, “போலீசிடம் தகவல் அளித்தால் கொலை செய்கிறோம்” என அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2014இற்குப் பிறகு தனது உயிரையும் குடும்பத்தையும் காக்கவே வேறு மாநிலத்திற்குப் புறப்பட்டதாகவும், தற்போது தான் மனச்சாட்சி கிளர்ந்ததாலேயே இந்த புகாரை அளிக்கத் துணிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மர்மமான மரணங்கள் பின்னிலையில் சக்தி வாய்ந்த நபர்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், “எனக்கும் எனது குடும்பத்திற்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டால் அந்த நபர்களின் பெயர்களை வெளிக்கொணர தயார்” என்றும் உறுதியளித்துள்ளார்.

புகாரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, தர்மஸ்தளா கிராமத்தில் புதைக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் சில எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், அவை காவல்துறைக்கு ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான புகாரை தொடர்ந்து, தர்மஸ்தளா போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சம்பந்தப்பட்ட இடங்களில் உடல்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்ற அனுமதி கோரி, விரிவான விசாரணைக்கு திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக உண்மை வெளியாகுமா? பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின் மறைந்திருக்கும் சக்தி வாய்ந்த முகங்கள் யார்? என்பன தொடர்பாக மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது

Exit mobile version