விழுப்புரம் : தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இது தமிழகத்தில் இதற்கு முன் அங்கீகாரம் பெற்ற ஐந்து முக்கிய இடங்களுக்கு பின் ஆறாவது உலக பாரம்பரிய சின்னமாக இடம் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில்பாதை ஆகியவை ஏற்கனவே உலக பாரம்பரிய சின்னங்களாக உள்ளன. இப்பின்னணியில் செஞ்சிக் கோட்டையின் சேர்க்கை, தமிழர் வரலாறு மற்றும் கட்டிடக்கலைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதப்படுகிறது.
செஞ்சிக் கோட்டையின் சிறப்புகள்
“கிழக்கின் ட்ராய்” என புகழப்படும் செஞ்சிக் கோட்டை — இந்தியாவின் மிக வலுவான கோட்டைகளில் ஒன்று. ‘உட்புக முடியாத கோட்டை’ என்ற பெருமையுடன் இது, இயற்கையும் மனித அறிவும் இணைந்த சிறந்த பாதுகாப்பு கட்டுமானமாக விளங்குகிறது.
மூன்று பெரிய மலைகளில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோட்டையின் முக்கிய பகுதிகள் கிருஷ்ணகிரி (ராணிக்கோட்டை), ராஜகிரி, சக்கிலிதுர்கம் (சந்திரகிரி) ஆகும். சுமார் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து உள்ள இந்த கோட்டையில் 12-13 கி.மீ நீளமுள்ள மதில் சுவர்களும், கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச்சாலை, கோயில்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட பல கட்டிடங்கள் காணப்படுகின்றன.
வரலாற்று முக்கியத்துவம்
13ஆம் நூற்றாண்டு : இடையர் குலத்தைச் சேர்ந்த ஆனந்த கோன் முதன்முதலில் கோட்டையை கட்டினார். அவரின் வாரிசுகள் மற்றும் கிருஷ்ண கோன் ஆகியோர் விரிவாக்கம் செய்தனர்.
விஜயநகரப் பேரரசு (14–16ம் நூற்றாண்டு): கோட்டை விஜயநகர ஆட்சியில் சேர்ந்தது. கோபண்ணராயர் போன்ற ஆட்சியாளர்கள் பல முன்னேற்றங்களை செய்தனர்.
செஞ்சி நாயக்கர்கள் : பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோட்டையின் தற்போதைய அமைப்பு உருவானது.
பிஜப்பூர் சுல்தான் (1649): செஞ்சி நாயக்கர்கள் வீழ்ந்த பின், பிஜப்பூர் சுல்தான்கள் கோட்டையை கைப்பற்றினர்.
சிவாஜி (1677): கோட்டையை கைப்பற்றி மராட்டியப் பேரரசுடன் இணைத்தார்.
முகலாயர் முற்றுகை (1690–1698): சுல்பிகர் அலி கான் தலைமையில் முகலாயர் 8 ஆண்டுகள் முற்றுகை வைத்தும் கோட்டை உட்புக முடியாத நிலை இருந்தது.
தேசிங்கு ராஜா (1714): முகலாய ஆட்சிக்குப் பின் தேசிங்கு ராஜா வீர மரணம் அடைந்தார். கோட்டை பின்னர் ஆற்காடு நவாப்பின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி: 18ம் நூற்றாண்டில் கோட்டை பல்வேறு அரசியல் மாற்றங்களை சந்தித்து, இறுதியில் 1799-இல் ஆங்கிலேயர் வசமானது.
இன்றைய நிலை
1921-ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. இது தமிழர் கலாசாரம், கட்டிடக் கலை, போர்திறன் மற்றும் அரசியல் வரலாற்றின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் பெருமைமிக்க நினைவுச்சின்னமாகத் திகழ்கிறது.

















