மதுரை: அதிமுகவில் ஒருகாலத்தில் முக்கியத் தலைவராக இருந்த செங்கோட்டையன், தற்போது கூஜாவாகிவிட்டார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை டிடிவி தினகரன் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக சார்ந்த நிகழ்வில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஆலோசனை நடத்துவோம். அதிமுகவில் ஒருகாலத்தில் ராஜாவாக இருந்த செங்கோட்டையன் இப்போது கூஜாவாகிவிட்டார். ஜெயலலிதா காலத்திலேயே முதல்வராக ஆசைப்படியதால் அவர் அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்,” என கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வருவது தெய்வத்தின் தீர்ப்பு. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது டிடிவி தினகரன் துரோகம் செய்தவர். செங்கோட்டையன் முன்னால் பிறந்ததால் மூத்த நிர்வாகி ஆகிவிட முடியாது; அனைத்து தகுதிகளும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் உண்டு. நானும் ராஜன் செல்லப்பாவும் மூத்த நிர்வாகிகள்தான்,” என தெரிவித்தார்.
அதேபோல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கட்சியின் 54வது பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். அப்போது,
“நான்கரை ஆண்டுகளாக மக்களைப் பற்றி கவலைப்படாத திமுக அரசு, தற்போது மனுக்களைப் பெற்று நாடகம் ஆடுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளது. ரூ.1000 கொடுத்துவிட்டு ரூ.5000 பறிக்கிறார்கள்.
டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றோர் வெளியேறியதால் அதிமுக அழிந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. செங்கோட்டையன் தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்துவிட்டு எதிர்முகாமில் சேர்ந்து விட்டார்,” என சீனிவாசன் விமர்சித்தார்.
அவர் மேலும், “ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்பவர்கள் எவரும் நீண்ட நாளாக நிலைக்க முடியாது. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒருங்கிணைந்து எதைச் செய்யப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் அனைவரும் சரணடைந்த நிலைக்குச் சென்றுவிட்டனர்,” எனக் கூறி கட்சி ஒற்றுமை குறித்து வலியுறுத்தினார்.















