செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு செய்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்:- 150 க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா
செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக உருவாக்கக் கோரி, செம்பனார்கோவில் வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு செய்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. 150க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி என 4 வருவாய் வட்டங்களில் 287 வருவாய் கிராமங்கள் உள்ளன. செம்பனார்கோவில் பகுதி மக்கள் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் சுமார் 15 முதல் 30 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. 2 அல்லது 3 பேருந்துகள் மாறிச் செல்வதால் பொதுமக்களுக்கு நேர விரயமும், அலைச்சலும் ஏற்படுகிறது.
செம்பனார்கோவில் பகுதியில் ஸ்டேட் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள், நீதிமன்றங்கள், காவல் நிலையம், மின்சார வாரிய அலுவலகம், 15-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்களின் நலன் கருதி, மயிலாடுதுறை மாவட்டத்தின் 5-வது வட்டமாக செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
செம்பனார்கோவில் வணிகர் சங்க தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
