“ஆட்சி இன்னும் 6 மாதம்தான் நீடிக்கும்” – திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான் !

திருச்சி : “கள் மது என்றால் மது ஆகிவிடுமா? இன்னும் உங்கள் ஆட்சியும் 500 ஆண்டுகள் இருந்திட போகிறதா? சரியாக இன்னும் 6 மாதம்தான்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற ‘கள் விடுதலை மாநாட்டில்’ கலந்து கொண்டு பேசிய சீமான், பனை மரங்களின் பாரம்பரிய முக்கியத்துவத்தையும், ‘கள்’ எனப்படும் பனம்பாலின் மருத்துவ குணங்களையும் வலியுறுத்தினார்.

“மாடு புல்லையும், தண்ணீரையும் குடித்து பசும்பாலாக தருகிறது. அதுபோல பனை மரம் தண்ணீர் குடித்து பனம்பால் தருகிறது. அதுதான் ‘கள்’. இது பனையிலிருந்து பெறப்படும் மூலிகை சாறு. கள் என்பது உணவுப்பொருள், மருந்து,” என்று அவர் தெரிவித்தார்.

சாராய ஆலைகளை நிர்வகிக்கிறவர்கள் ‘கள்’ விற்பனையை எதிர்க்கிறார்கள் என்றும், டாஸ்மாக் விற்பனை பாதிக்கப்படும் என்ற பயத்தால் சிலர் ‘கள் மதுவாகும்’ என தவறாகப் பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“பனை மரத்தைத் தாய் என்று நினைத்து கட்டி அணையுங்கள்; அது தாய்நிலத்தின் வளத்தை காக்கும் மரம். பனைமரம் நிறைந்த காட்டுகளில் எப்போதும் வளம் இருந்திருக்கிறது,” என்று சீமான் பேசினார்.

மேலும், “ஆடு, மாடு மேய்ப்பது, வேளாண்மை செய்வது எல்லாம் எங்கள் குலத்தொழில். கள் தயாரிப்பும் ஒரு பாரம்பரிய தொழில். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும், அரசுக்கு வருமானம் தரும்,” எனக் கூறினார்.

திமுக ஆட்சி குறித்து விமர்சனம் :

“என்னைக் கல்லூரிகளுக்கு அழைக்காதீர்கள் என்று உத்தரவு விடுகின்றனர். என்னை பார்த்து நடுங்குகிறார்கள். எல்லா கட்சிகளும் என்னை எதிர்த்து போராடும் அளவுக்கு வந்துவிட்டன. உள்ளே பயந்து நடுங்கி, வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்,” என்றார் சீமான்.

சமூக, பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு தேவையான அரசியல் தான் நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பதாகவும், திமுக ஆட்சி மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

“இன்னும் உங்கள் ஆட்சி 500 ஆண்டுகள் நீடிக்கப் போகிறதா ? சரியாக இன்னும் 6 மாதம்தான்!” என கூறினார்.

Exit mobile version