அரிய கடல் உயிரினமான திமிங்கலத்தின் உமிழ்நீரான அம்பர் கிரீஸ் (Ambergris) கடத்தல் முயற்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவுக்கு கடத்த முயன்ற 40 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கடல் தங்கம்’ எனப்படும் அம்பர் கிரீஸ் என்ன?
20 வயதை கடந்த திமிங்கலங்கள் உடலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழ்கின்றன. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட இந்தப் பொருளே அம்பர் கிரீஸ்.
உயர்தர வாசனை திரவியங்கள், விலை உயர்ந்த மதுபானங்கள் மற்றும் சில மருந்துகள் தயாரிப்பில் இது முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை ஒரு கிலோக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை செல்லும். அதனால் இதனை “கடல் தங்கம்” என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பர் கிரீஸ் விற்பனை, வாங்குதல் மற்றும் சேகரிப்பது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கடத்தல் முயற்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
ரகசிய தகவல் & அதிரடி சோதனை
தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு திமிங்கல உமிழ்நீர் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில், உதவி வன பாதுகாவலர் ஸ்ரீவல்சன் மேற்பார்வையில் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள் திருப்பதிசாரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சொகுசு கார் மற்றும் மீன்பெட்டிகள் ஏற்றிய மினி டெம்போ வாகனம் சோதனைக்காக நிறுத்தப்பட்டன. டெம்போவில் இருந்த மீன்பெட்டிகளை சோதித்தபோது, அதில் 40 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பல கோடி மதிப்பு, ஆனால் கணிக்க முடியாதது
பறிமுதல் செய்யப்பட்ட உமிழ்நீரின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் “காட்டில் உள்ள மரங்களுக்கு விலை மதிப்பிடலாம்; உயிரினங்களால் உருவாகும் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.
மூவர் கைது
கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக
தனுஷ் (22) – ஈத்தாமொழி ஆடராவிளை,
தினேஷ் (27) – தூத்துக்குடி முத்தையாபுரம்,
ரதீஷ்குமார் (42) – குலசேகரன்பட்டினம்
என மூவரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவிலில் பரபரப்பு
அம்பர் கிரீஸ் கடத்தல் தடுப்பு நடவடிக்கை நாகர்கோவிலிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடல் வழியாக நடைபெறும் சட்டவிரோத கடத்தல்களை தடுக்க வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

















